சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

தீயில் எரியும் எம் தீவு
திரும்பிப் பார்க்க வைக்கின்றது அதன் நிகழ்வு
சொல்லைக் காவ மறுக்கிறது நாவு
சொல்லாது விடினும் தீராது சோர்வு
அன்றும் இன்றும் அரங்கேறும் நிகழ்வு
ஆனாலும் ஆணிவேரோ வேறு வேறு
எல்லைக் கோட்டால் எரிந்தது எம்பாகம் அன்று
தொல்லை அதிகரிப்பால் எரிகிறது அவர் பாகம் இன்று
அன்று இனவெறித் தீயால் எரிந்தது எம்தீவு
இன்றோ பசிவெறித் தீயால் எரிகின்றது எம்தீவு
தீ வைத்தவருக்கே தீயின்று
தீண்டியது முன்வினையே
அவரினத்தைக் கொண்டே அறிவித்ததும்
இறைவிருப்பே
எரிந்தே சாம்பலாகட்டும்
இனவாதமும் இத்தீயில்
எழுந்தே சிரிக்கட்டும் எம் ஈழமாதாவும் தீச்சுவடுகள் கழன்று