சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 252
06/02/2024 செவ்வாய்
காதலர்
————
தம்மையே தாம் மறப்பர்
தனிமையே இனி தென்பர்
இம்மையே சிறப் பென்பர்
இதுவல்லொ சுகம் என்பர்!
கண்ணாடி முன்னே நிற்பர்
கண்சிமிட்டி கை அசைப்பர்
முன்னோடி பயிற்சி செய்வர்
முகமெலாம் அலர்ந்து நிற்பர்!
கற்பனைக் கடலில் தோய்வர்..
கனவுலகில் திளைத் திடுவர்..
சொர்ப்பனச் சுவை காண்பர்..
சோதனை பல தாங்கிடுவர்!
உறவுகளை எதிர்த் திடுவர்..
ஊருக்கும் பதில் சொல்வர்..
அறிவுரை ஏதும் கேட்கார்..
அனைத்தும் முடியும் என்பர்!
காதல்தாம் பெரி தென்பர்..
காசெல்லாம் சிறி தென்பர்..
மோதல் பல எதிர்கொள்வர்..
முகம்புதைத்து சுகம் காண்பர்!
காதலரே!
உடலும் உயிரும் இரண்டாய்..
உள்ளம் என்றும் ஒன்றாய்……
கடலாய்,அலையாய்,நிலையாய்..
காலமெலாம் வாழ்வீர் நன்றாய்!
நன்றி
மதிமகன்