சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 236
03/10/2023 செவ்வாய்
குழலோசை
——————
ஒன்பது துளைகள் ஊடாய்,
உலகில் கேட்குதே கானாய்!
உனது இசையோ பூவாய்,
உள்ளம் வருடுமே தானாய்!
விரல்களின் சிறிய அசைவில்,
விழுகுதே தேனாய் காதில்!
சுரங்களின் இனிய இணைவில்,
சுரக்குதே தேனும் பூவில்!
கைகள் தாளம் போடும்!
காற்றில் தலையும் ஆடும்!
சைகை மேலும் இசையும்!
சாய்ந்து தேகம் அசையும்!
குயிலும் அமர்ந்து கேட்கும்!
குழந்தை அழுகை தீர்க்கும்!
வெயிலும் மழையும் அசரும்!
வேய்ங்குழல் எதையும் கவரும்!
மண்ணை அளந்த கண்ணன்-
மன்னன் கையின் சின்னம்
திண்ணை ஓரம் எங்கும்,
தேனாய் ஒலிக்கும் திண்ணம்!
நன்றி
மதிமகன்