சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 232
05/09/2023 செவ்வாய்
“விடுமுறைக் களிப்பு!”
—————————
விடுமுறை தருவதோ களிப்பு
வீடெங்கும் நிறையுமே சிரிப்பு
அரைகுறை வேலையும் முடிப்பு
அடுத்தவர்க்கு சொல்லத் துடிப்பு!

விமானம் ஏறிடப் பரபரப்பு
விணணை முட்டிடும் நினைப்பு
கஜானா வெளிப்பது மறப்பு
களிப்பில் உலகமே துறப்பு!

மலைகள் ஆறுகள் மலைப்பு
மனிதம் மாண்பெனும் நினைப்பு
விலைக்கு ஏதுமில்லை மதிப்பு
வேண்டுவன வாங்கிக் குவிப்பு!

இருக்கும் நோயெல்லாம் பறப்பு
இளமை திரும்பிய முனைப்பு
மருந்து மாத்திரைகள் மறப்பு
மகிழ்வே மருந்தெனும் நினைப்பு!

விடுமுறை கழிந்ததும் அலுப்பு
வீட்டிற்குத் திரும்பிட வெறுப்பு
மறுமுறை எப்போதென நினைப்பு
மருந்து மாத்திரை மீளெடுப்பு!

விடிந்தால் வேலை நினைப்பில்
விடுமுறை மனதின் இருப்பில்
முழங்கால் சட்டை இடுப்பில்
முழுநீளச் சேலையும் கிடப்பில்!
நன்றி
மதிமகன்