சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 288
03/12/2024 செவ்வாய்
பனிப் பூ
————-
ஆகாயம் கொட்டுதே பனிப்பூ
ஆஹா என்னவொரு வனப்பு
“பூ” தாயின் உடல்மூடும் விரிப்பு
பூக்களும் வெள்ளையான வியப்பு!

பனிவிழும் ஓர் மலர்வனம்
பகரும் அழகு தினந்தினம்-புல்
நுனிதனில் உன் புகலிடம்
பூத்தது போலே ஒளிரும் விதம்!

வெட்டை வெளி விலக்கில்லை
வீழும் இடமே ஒரே வெள்ளை
குட்டை குளி மறையும் நிலை
கூடவே வரும் சறுக்கும் தொல்லை!

கதிரவன் களவாடிய தண்ணீர்
காட்டுதே தன்வரவால் வெண்ணீர்
உதிரமும் உறைந்திடும் வன்னீர்
உறைந்திட உலகமே கண்ணீர்!

அழகிலும் உண்டிங்கு ஆபத்து
அதை உணர்த்திடும் பாங்கு-நீ
இளகிடும் போதும் உண்டிங்கு
இனம்தெரியாத குளிர் ஒன்று!
நன்றி
மதிமகன்