சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 279
01/10/2024 செவ்வாய்
வெற்றிப் பயணம்
—————————-
முள்ளும் வரும் கல்லும் வரும்
முதுகினிலே குத்தும் விழும்
எள்ளி நகை யாடல் வரும்
எழுந்து நிற்க பயமும் வரும்!

வில்லுடன் அம்பும் வரும்
வீழ்த்தி விட ஆளும் வரும்
பல்லுத்தெறி சொல்லும் வரும்
பழிக்கு மேல் பழியும் வரும்!

கல்வியிலும் தடைகள் வரும்
கணை தொடுக்கும் நேரம் வரும்
அல்லிவிழி அழைப்பும் வரும்
அதைத் தாண்ட வேண்டி வரும்!

அரும்பு முற்றி மலரும் வரும்
அதைத் தேடி அளியும் வரும்
விரும்பாத செயல்கள் வரும்
வேண்டாத தடைகள் வரும்!

கரும்பானது கசப்பாய் தோன்றும்
கணக்கதில் பிழையும் தோண்றும்
நெருப்பான தெல்லாம் தாண்டில்
நிகழ்ந்துவிடும் வெற்றிப் பயணம்!
நன்றி
மதிமகன்