சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 271
25/06/2024 செவ்வாய்
“நடிப்பு”
————
திடல் நிறை பெரும் கூட்டம்,
திசையெங்கும் ஒலிபெருக்கி,
திரை இப்போது விலகிற்று..
திடீர் ஆரவாரம் முத்திற்று!!

பெருமையுடன் ஓர் பேரரசர்!
பின்னால் மும் மனைவியர்!
கருங்கூந்தல் மீதில் பெருமுடி!
கணக்கில்லா பல சேனைகள்!

மூத்த மகனுக்கு முடிசூடுவிழா!
முத்து முடியொன்று காட்சிக்கு!
முழுபேர் முகத்திலும் முறுவல்!
முழுமதியென வரும் இளவரசர்!

மகுடி ஓசையொன்று கேட்கிறது!
மனுசி ஒன்று நுழைகிறது!
மனைவி ஒருத்தி குசுகுசுப்பு!
மறுகணமே எல்லாம் பிசுபிசுப்பு!

“தேரில் விரல் வைத்தேனே…
தேடுகிறேன் நான் வரந்தனை!”
தேம்பினார் மன்னர், வரம் ஈந்து!
தேள்குத்தி வீழ்ந்து தனையீந்து!

மூத்தவர் வனவாசம் போகிறார்!
முத்தான மனைவி கூடவே!
முன்பின் திரிந்த இளையவனும்,
முன்னவர் பின்னே தொடரவே!

பார்வையாளர் கண் குளமாக..
பாவியவள்! என்று வாய் திட்ட..
பார்த்த மூத்தவர் சொன்னார்,
“பதறாதீர்! இதுவோர் நடிப்பு!”
நன்றி
“மதிமகன்”