வியாழன் கவிதை

மண்ணவளின் மகிமை

ரஜனி அன்ரன்

“ மண்ணவளின் மகிமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.12.2024

மண்ணவளின் மகிமை
மன்னுலகிற்கே பெருமை
மண்மகளைக் கண்போல் காத்திடவே
மாண்புடனே தந்ததே ஐ.நா.மன்றும்
மார்கழித் திங்கள் ஐந்தினை
உலக மண்தினமாக்கி மகிமை கொள்கிறதே !

இறைவன் தந்த அற்புதவளம்
இயற்கையின் அருங்கொடை
மனித வாழ்வும் வளமும்
மறைவும் நிறைவும்
மண்ணுக்குள்ளே தான்
பொக்கிசமான பொன்னும் வைரமும்
புதைந்திருப்பதும் மண்ணுக்குள்ளே தான் !

தவழ்ந்த போதும் தடுக்கி விழுந்த போதும்
நின்ற போதும் நிலைகுலைந்த போதும்
எமைத் தாங்கியவள் நீயல்லவா
வாழ்வின் தொடக்கமும் முடிவும் நீயே நீயே
உழவனின் கலப்பையில் குயவனின் சக்கரத்தில்
கலை வண்ணமானவள் நீயே நீயே
ஜனித்துவிட்ட உயிர்களையெல்லாம்
அரவணைத்து மகிழ்கிறாய்
மடிந்த பின்பும் உன் மார்போடு சேர்த்தணைக்கிறாய்
மண்ணின்றி வாழ்வில்லை மண்ணின்றி எதுவுமில்லை !