சந்தம் சிந்தும் கவிதை

ப.வை.ஜெயபலன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 274 “ விடுமுறை”
*என் அம்மா
என்னை பெத்து. எண்ணி ஆறே மாதம்,
என் அப்பா
எமனுக்கு இரை.
இருப்தொம்பது வயசிலே
இளம் விதவை.
அப்பா அம்மா
எல்லாமே எனக்கு
எப்பவுமே அவதான்.
தொட்டிலிலே கிடத்தி
தூங்கும் வரை தாட்டும்
மெட்டில் துயரம்
கொட்டும் வரியில்
பாட்டிசைபாவாம் அம்மா
பாட்டி சொல்ல
கேட்டேன்.
கட்டிலிலே படுக்கையிலே
அவ மேல்
கால் போட்டு
கட்டி அணத்தாலே
வரும் தூக்கம்.
இட்லி ,தோசைக்கு
இரவிரவாய் உளுந்தரைப்பா.
குந்தி இருக்க
குசினிக்குள் இருக்கும்
கட்டை பலகைகளை
அடுக்கி படுப்பேன்
அவ அரைத்து முடியும்வரை
அருகே.
தொடராக மாதத்தில்
மூன்று நாள்
விறாந்தை ஓரமாய்
வெறும் பாயில் படுப்போம்.
வட்டில் குவளை எல்லாம்
தனித்தனி
அம்மாவுக்கும் எனக்கும்
அந்த மூன்று நாள்.
தொட்டால் துடக்காம்.
மற்றவர்கள்.
பாட்டிதான் சமையல்
பண்ணுவா மூன்று நாளும்.
ஏனம்மா இப்படி
எனக் கேட்டேன் ஒருநாள்.
அம்மா சொன்னா
அந்த மூன்று நாள்
ஆண்டவன் தந்த
விடுமுறையாம்
தன் பால் இனத்துக்கு.
பாய்ப் படுக்கை
பஞ்சணை ஆனது
அதன் பின் எனக்கு
ஓயாது வேலையில்
ஓடியாடி உழைக்கும்
தாயார் விடுமுறையை
கழிக்கும் களிப்பில்…

ப.வை.ஜெயபாலன்