வியாழன் கவிதை

போனும் போராட்டமும்

இரா.விஜயகௌரி

தொலைபேசி இல்லாத துளிகளெல்லாம்
அலைபாயும் எண்ணத்தின் உரசல்களில்
திசைமாறும் தேடல்களின் பயணங்களாய்
பயன் வேண்டி பயன்ற்றும் போவதுண்டு

உதயத்தை உணர்வோடு செப்பி எழும்
உன்னிப்பாய் பலர்சேதி காது தரும்
சில வேளை சினத்தெழுந்து பேசவைத்து
பொருளற்ற பொழுதுக்கும் வழி சமைக்கும்

வலைக்குள்ளே சிக்கி எழும் மீனாகுவோம்
அகப்பட்டால் விடுதலைக்கே வழியில்லையே
தொலைந்தாலோ இழப்புக்கு ஈடில்லையே
எதற்காக என்றெண்ண புரிதல் இல்லை

நல்லவைக்கும் தீயவைக்கும் கருவாகுதே
நாணி எழும் பொழுதுகட்கும் வித்தாகுமே
இளையவர் கை இழைவதெல்லாம் சுழற்சி கொள்ள
உதயத்துள் பின்னியெழும் மாயவலைதான்