சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

சிறுமை கண்டு பொங்குவாய்

உரிமை மறுப்பும்
உடமை அழிப்பும்
தந்ததன் வலிகள்
உணர்விலே குற்ற

எம்மினம் காக்க
பொங்கிய ஒருவன்
புலிப்படை அமைத்து
பெரும்படை கொண்டான்.

சிறுமையாய் எங்களை
சிதைத்தவன் முன்னே
பெருமையாய் நிமிர
மனோபலம் ஆனான்.

கருமைகள் படர்ந்த
கார்முகில் காலம்
கவலைகள் போக்கிட
கரிகாலனாய் பிறந்தான்.

இடர்களுக்குள்ளே
இருந்திட்ட எம்மை
சுடராகி எரிந்து
பேரொளியினை தந்தான்.

பதுங்கியே வாழ்ந்த
வாழ்வினை மாற்றி
பாயும் புலியென எழுந்திட
பெரும் துணிவும் தந்தான்.

ஈழம்க் கனவை
இறுகப் பிடித்து
இருப்பின் அரணாய்
நெருப்பாய் எழுந்தான்.

சுடுகலை பயின்று
விடுதலை வேள்வியில்
தன்னை ஆகுதியாக்கிட
விருப்புடன் நின்றான்.

வஞ்சகம் சூழ்ந்த
வெஞ்சமர் தனிலும்
நெஞ்சுரம் குன்றா
நிலையுடன் நின்றான்.

இருப்பினை உணரா
நிலையாகி நின்று
இறைவனாய் என்றுமே
இதயத்தில் எழுந்தான்.