சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

இதயம்

எதை எதையோ சுமந்து
பதை பதைத்த என் இதயம்
சுமைகளை இறக்கி
சுகம் காண்பது எப்போ?

வகை வகையாய் வலிகளை
வாரியிறைத்த காலம்
வாழ்விலே எனக்கு மட்டுமாய்
கொடுக்கப்பட்ட
வரையறையின்றி போன காயம்.

எத்தனை அடிகள்
அத்தனையையும் தாண்டி
எழுந்துகொள்ள
எத்தனிக்கும்போதெல்லாம்
மறுதலிக்கும் மாயம்.

சுடுமணலில் ஈரமாய்
சுருங்கிக்கொண்ட கணங்களே!
நான் சுகம் காணும் நேரம்.
மகிழ்வென்ற ஒன்றை மட்டுமே
உமிழ்ந்து கொண்டிட
மறுக்குதே என் இதயம்.

மாறும் மாறும் என்ற நிலை
மாற்றமின்றியே நகருதே
தேறும் தேறும் என்ற நிலை
தேற்சியின்றியே கரையுதே.

வாழ்வின் பிடிப்பையே
நொருக்கிப்போட்டவள்
இதய பிடிப்பிலிருந்து
இன்றுவரை விலகாதவள்

என் இதயம் தாங்கிய
வலிகளுக்குள் உச்சமாய்
இன்றும் எனை உலுப்பும்
வலியாகிப் போனவள்

என் இதய கூட்டைவிட்டு
இடம்மாறிப் போனவள்
அவள் இருந்த இடத்தினை
வலிகளால் மட்டுமே நிரப்பி

வாழ்வின் நீட்சிவரை
அவளின் நினைவுகளால்
அவதியுறும் வாழ்வோடு
ஆனோமே என்ற தாக்கமதை

என் இதயம்
தாங்கும் சக்தியுள்ளவரை
தாங்கி கடப்பேனே தவிர
வேறொருத்தியை தங்கிட வையேன்.