சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

ஈரம்

நெஞ்சில் இனி ஈரமில்லை
நேசித்திட மனமுமில்லை
நெருங்கி இனி வருவதற்கு
நேசத்தில் ஈர்புமில்லை.

நஞ்சு மாலை தரித்துநின்று
வெஞ்சமரும் ஆடிவென்று
நெஞ்சினிக்க தாங்கி நின்றோம்
நேசம் வைத்த உங்களையே!

வஞ்சம் எமை சூழ்ந்தது
வாஞ்சைகளும் தோற்றது
உச்சமது தளர்ந்தது
உவர்நிலத்தில் ஓய்ந்தது.

எதிரியின் பிடியில்
எமக்கான நேசம்
அகப்பட்டு கொண்டது
அவதியும் பட்டது

கட்டவிழ்வுகளுக்குள்
கரையும் எம் நேசம்
கண்கொண்டு பார்த்திடா
கலக்கத்தின் காலம்

காத்து நின்ற அத்தனையும்
காத்தோடு போனது
கலாச்சார மேவலில் எம்
கனவுகளும் சிதைந்தது.

மீண்டுமொரு விடுதலை
மூண்டிடாது வண்ணம்
எண்ணத்தை மாற்றிய
எதிரியின் திட்டம்

பலித்திடும் வகையில்
பலிகளாய் நீங்கள்
பாதைகள் மாறி
பயணங்கள் தொடர

பார்த்துக்கொண்டிருக்க
எம்மால் முடியவில்லை
பார்த்து பார்த்து கட்டிய
பாசம் நிறைந்த ஈழம்

சீரழிவுகளுக்குள் சிக்குண்டு
சினம் கொள்ள வைக்குது
இனம் காக்க சுவாசம் தந்த
மறவர்களின் ஈகைகளும் தோற்குது.

அவலத்தில் அடியுண்டு
நீங்கள் அவதிப்படவா
ஆயிரமாயிரம் உயிர்களை
ஆகுதியாக்கி யாகம் செய்தோம்.

மாறுங்கள் தேறுங்கள்
தேசவிடுதலையை உங்கள்
எண்ணத்தில் விதையுங்கள்
மீண்டும் ஈழம் துளிர்க்கட்டும்.