மாற்றம்
காற்றும் ஓர் நாள்
எம் திசை நோக்கும்
போற்றும் நிலையாய்
எம் வாழ்வும் மாறும்.
தூற்றும் உலகிடம்
தோற்றே நின்றோம்
திசைக்கு ஒன்றாய்
சிதறியே போனோம்.
வேண்டிய மாற்றம்
கிடைத்திடத் தானே
விடுதலை வேள்விக்காய்
ஆகுதியாகி நின்றோம்.
இனத்தின் இருப்பை
இதயத்தில் ஏந்தி
கனத்த இரும்பை
கரங்களில் சுமந்தோம்.
உரத்த வீர!
உறுமலை கேட்டு
உலகமே நடுங்க
உச்சமாய் இருந்தோம்.
உயிர்க்கொடை தந்த
உத்தமர் தியாகம்
உணர்வினில் இருத்தி
உறுதியாய் எழுந்தோம்.
அஞ்சிய வாழ்வு
அகன்றிட வேண்டும்
கெஞ்சிய நிலையும்
மாறிட வேண்டும்.
மிடுக்காய் நீங்கள்
வாழ்ந்திடத் தானே
விழிப்பாய் இருந்து
உங்களை காத்தோம்.
சீண்டும் எதிரியின்
சினங்களை அடக்கி
சிங்கள அரசையே
சிரம்தாள வைத்தோம்.
காலம் எங்களை அழைத்தது
காயம் தழுவியே நடித்தது
சாலம் அறியா எங்களை
சதிவலை மாட்டி கொண்டது.
கொள்கை விலகா எங்களை
கொன்றிட உலகே விரைந்தது
மன்றாடி கொள்வார் என நினைத்தது
போராடி மடிதல் கண்டு வியந்தது.
தாகத்தோடு எழுந்தோம்
தாகத்தோடு மறைந்தோம்
தாகம் தீரும் வரையில்
ஈழம் நோக்கியே எங்கள் பார்வை.