சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

ஆடி

ஆடியில் வருகின்ற
அமாவாசையில் மட்டுமா
அப்பா உன் நினைப்பு
வந்திடுமோ எனக்கு.

அப்பா! தப்பாத உன் நினைப்பில்
தினம் தினம் தத்தளிக்கின்றேன்
எப்போதும் என் நினைப்போடு
ஒட்டிக்கிடக்கும் முதன்மையானவனே!

நீ விழிமூடிய கணத்திலிருந்து
என் வாழ்க்கை பயணங்களை
விழிப்போடு கடக்கின்ற
கட்டாயத்தோடே கடக்கின்றேன்.

என் வழி காட்டியே!
உன் விழி காட்டிய பதைகளில் பயணித்த எனக்கு தனியே பயணிப்பதென்பது தடுமாற்றமே.

உறவென்ற உன்னதத்தை
பறிகொடுத்த பெருவலியை
ஆற்றிடவும் தேற்றிடவும் எவருமின்றி
அலைகின்றேன் அனாதையாய்.

அப்பா! எனக்காக உருகி
என்னை மெருகேற்றிவிட்டு
உனது ஆயுளை அருகாக்கிய
தியாகத்திற்கு ஈடேதும் இல்லையப்பா!

இனிக்க இனிக்க
என்னை ஏன் வளர்த்தாய்
உன்னை இனிமையில் நான் இருத்தி
அழகுபார்க்கும் காலத்தில்
எனை விட்டு ஏன் அகன்றாய்.

நீங்கள் உழைத்து உழைத்து
தேடிவைத்த செல்வங்கள்
நிறையவே இருந்தாலும்
நீங்கள் என் அருகிருப்பதே
எனக்கான பெரும் சொத்தப்பா!

அப்பா! மீண்டும் உங்கள் மகனாய்
நான் பிறந்திட வேண்டும்
மீண்டும் அந்த ஆனந்த வாழ்வை
நான் வாழ்த்திட வேண்டும்.