சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

அத்திவாரம்

பார்த்து பார்த்து
என்னை வளர்த்தவர்கள்
பக்குவமாய் நான் வாழ
அத்திவாரம் இட்டவர்கள்

அருகிலும் இல்லை
உலகிலும் இல்லை
அனாதையாய் இன்று
அலைகின்றேன் தனியே.

விதியின் கணக்கால்
விலகிய உங்கள் நினைவால்
விழிகளின் ஓரம் விரையும் நீரால்
கரைகின்றேன் தினமும்.

அரும்பாடு பட்டென்னை
ஆளாக்கி விட்ட கடன்
நிறைவேற்றும் நிறைவோடு
நானே வளர்ந்திருக்க

அகிலத்தில் நீங்களுமில்லை
அமைதியாய் நானுமில்லை
அவசரமான உலகத்தில் உங்கள்
அரவணைப்பையே தேடுகின்றேன்.

பிரிவின் பெருவலி
பிரியாத ஒன்றாய் என் வாழ்வோடு
பின்னிக் கிடக்கின்றதே
பிரியமானவரே! உங்கள் பிரிவால்.

ஒருநூறு சொந்தம்
இருந்தென்ன இலாபம்
பெற்றோரே உங்களை
பிரிந்ததே எனக்கான சாபம்.

அத்திவார பலப்போடு
நிமிர்ந்த அடுக்குமாடியாக
நானும் உடலால் மட்டுமே
நிமிர்து நிற்கின்றேன்

உள்ளத்தால் என்னால்
நிமிர முடியவில்லை
உங்கள் நினைவு சுரப்புக்குள்
நிமிரவும் விட்டதில்லை.

உங்கள் பாசமும் நேசமும்
என் வாழ்வுக்கான அத்திவாரம்
அது என் நினைவோடு
என்றைக்கும் என்னோடே இருக்கும்
எனதருமை பெற்றோரே!