சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

வசந்தம்

நீ தந்த வசந்தம் என்
நினைவோடு இருந்து
நீளும் என் துயரை
நிறுத்திய சில கணம்
நீண்ட கணங்களாய்
நிலைத்திட வேண்டும்.

எத்தனை எத்தனை சுகங்கள்
அத்தனையும் நினைவாய்த்தான்
நிலைக்குமென்று நினைக்கவில்லை
உயிர் காத்திடவே உனை பிரிந்தேன்
உயிரிருந்தும் உணர்வற்றவனாய்
வாழ்வேன் என்ற நிலையறிந்திருந்தால்
உன்மடியிலேயே எனதுயிரை
மாய்த்து விதையாகியிருப்பேன்.

அறம் காத்து உறுதியோடு
உனையே நேசித்த எனக்கு
புறமுதுகு காட்டி ஓடவைத்த
பொல்லாத காலம்.
புகலிடம் கோரிக்கை புறக்கணிப்போடு
புலம்பும் என் வாழ்வு.
துலக்கியது உன் புலமையை தாயே!

மீண்டும் என் வாழ்வில்
வசந்தமே! இல்லையென்ற
நிலை மாற வேண்டுமாயின்
மீண்டும் உன் மடி சாய்ந்தாலன்றி
மாற்று வழியே இல்லை எனக்கு.
உன்னை பிரிந்து வாழும்
என் வாழ்வின் வலிகளை
ஊடறுத்து வெளியில் வர
என்னால் முடியவில்லை
எனதுயிர் தமிழீழத்தாயே!