வியாழன் கவிதை

பவானி மூர்த்தி Swiss

எழுத்தின் வித்தே, பூத்தெழும் தமிழே

எழுத்தின் வித்தாய் எழுவாய் தமிழே
—– எங்கும் ஒலிக்கும் என்றன் தமிழே .
பழுத்த கனியாய் பண்பில் சுவைப்பாய்
—– பாரில் ஓங்கிப் பருவம் பார்ப்பாய் .
விழுந்த இடத்தில் விதையாய் முளைப்பாய்
—— விருட்சம் நீதான் விரைந்து வளர்வாய் .
முழுதும் போற்ற முத்தம் இடுவாய்
—– முத்தாய் மின்னி முகப்பாய் நிற்பாய் .

ஒழுக்கம் தன்னை ஓதும் தமிழே
—– ஒன்றும் மக்கள் ஒன்றச் செய்வாய்
இழுக்கோ உனக்கும் இல்லை இல்லை
—– இன்சொல் தானே உன்றன் எல்லை .
விழுப்பம் தரவே விரைந்து வாராய்
—— வீடும் நாடும் விரவி வாராய் .
எழுத்தும் வித்தும் என்றும் இணைய
—— ஏற்றம் பெற்றாய் என்றன் உயிரே .