வியாழன் கவிதை

பவானி மூர்த்தி

விருப்பு வெறுப்பு தலைப்பு

வேடிக்கை மனிதர்கள்

குற்றங்கள் பெருகியதோர்
உலகில் இன்று
குணமிக்க மக்களையே
காண்ப துண்டோ…
சுற்றங்கள் சூழ்ந்திடுவர்
நம்மைச் சுற்றிச்
சூதுகளும் வாதுகளும்
நிலையாய்க் கொண்டே…
கற்றிட்ட கல்வியையும்
மறந்தும் போவார்
காசினியில்…
நம்நிலைமை அந்தோ
பாவம்…
தற்சார்பு மங்கியதோர்
வாழ்வில் நாமும்
வேடிக்கை மனிதர்களா
சொல்வீர் …சொல்வீர்….

தலையாய பணியின்றி
நாமும் நின்றால்
தவறுகளும் கயமைகளும்
பெருகிப் போகும்…
விலையேற்றம் உண்டிங்கு
பாவம் ஏழை…
விதியாலே மாண்டிடுவார்
சரியும் தானோ….
உலைவைக்கும் சமுதாயம்
ஊன்றிப் பார்த்தால்
உயிர்களது
பெருஞ்சிறப்பை அறிவர்
அன்றோ…..
மலை மலையாய்
சோகங்கள் பெருகிப்
போனால் மாற்றங்கள்
எங்கே சொல் மனிதா நீயே
சொல் மனிதா …சொல். நீயே…

விலைமாதர் என்றிடுவார்
வேடிக்கை யாக்கி ..
வீட்டினிலே சோறுபோட
ஆட்கள் இல்லை…
கலையிழந்த
பெண்ணினத்தைக் கயவர்
கூட்டம்….
கற்போடு விளையாடும்
நாய்கள் போக்காம்….
அலையலையாய்
பெருகிடுமே கண்ணில்
கண்ணீர்….
அபலைகளின்
வாழ்க்கைக்கோர் அர்த்தம்
சொல்வீர்….
முளையிலேயே தெரிகின்ற
விளையும் வித்து…
முரடராக மாறுகின்றார்
சரியும் தானோ ……

போதைக்கே அடிமையாகும்
போக்கைக் கண்டால்…
பொங்கிடுதே
உணர்ச்சியுமே என்ன
செய்வேன்….
கீதைக்குக்
கீழ்படியும் மனிதர்
இல்லை….இல்லை….
கீழோராய் இருக்கின்றார்
கோபம் என்னுள்…
பாதைகளும் மாறுகின்றார்
பாவி யாகிப்
பதைபதைக்கும் நெஞ்சோடு
சொல்லு கின்றேன்….
காதைகளும் காட்சிகளும்
உண்மை சொல்ல….
காசினியில் வேடிக்கை
மனிதர் ஏனோ….ஏனோ….

ஆடுகின்ற ஆட்டம் எல்லாம்
நிலையும் தானோ
ஆண்டவனின் கணக்கினிலே
நரகம் உண்டு…..
வாடுகின்ற சிறுமியர்கள்
முதியோர் எல்லாம்…
வாட்டமதும் நீங்கிடவே
வேண்டு கின்றேன்….
தேடுகின்ற நன்னெறிகள்
தேட்ட மின்றித்
தெருவோர்க்கும் கிட்டிடவே
வேண்டு கின்றேன்….
பாடுகின்ற
என் கவிகள் பண்பைச்
சொல்லும்….
பாரினிலே
வேடிக்கை மனிதர்
யாரோ…? யாரோ…?
வேடிக்கை மனிதர்
யாரோ…..யாரோ…..?

பவானி மூர்த்தி
சுவிஸ்
15.06.2023

அன்புடன் வாணிக்கும்
சக தொகுபாளினிக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்
நன்றி..நன்றி