பண்டிகை வந்தாலே……கவி…ரஜனி அன்ரன் (B.A) 31.10.2024
பண்டிகை விழாக்கள் என்றால்
பண்பாட்டு விழுமியங்கள் களைகட்ட
கொண்டாட்டம் கும்மாளமென்று
புதுச்சட்டையும் போட்டு
பண்பாடி மகிழ்ந்திட்ட பசுமைக் காலமது
பட்டாசும் வெடிக்க வாண வேடிக்கையோடு
பட்சணங்கள் பரிமாறி பலகதைகள் கதைத்து
உறவுகளும் ஒன்றுகூடி மகிழ்ந்திட்ட காலமது !
பண்டிகைக் காலம்
அன்பினைப் பகிரும் காலம்
குடும்பமெனும் பந்தம்
குதூகலம் கொள்ளும் காலம்
தீபங்கள் ஏற்றி இருள் விரட்டி
ஒளி நிறைந்த வாழ்விற்கு வழிகா,ட்டி
பழைய கசப்புக்களும் மறந்து
புதிய நம்பிக்கை ஊட்டும்
பண்டிகை வந்தாலே பெரு மகிழ்வே !
ஆனாலும் புலத்து வாழ்வு தனில்
பண்டிகைகள் என்றாலோ
பண்பாடுமில்லை பரவசமுமில்லை
விடுப்பும் இல்லை விருந்துமில்லை
பகட்டிற்கு வாழ்த்துக்கள் பரிமாற
பண்டிகை வருகுது போகுது
ஏனோ தானோவென்று நகர்கிறது வாழ்வும்
எல்லோர் வாழ்விலும் இன்பம் நிறையட்டும்
வளங்கள் யாவும் பெருகட்டும் !