வியாழன் கவிதை

“நவீன திரௌபதிகள்”

அனுராதா சௌரிராஜன்

பரந்தாமன் கையில்
புல்லாங்குழல் மட்டுமே
புடவையைக் காணவில்லை
புரிந்து விழித்திடு வித்தியாசமாய்

கௌரவர்கள் கையில்
கடப்பாரை இருப்பதால்
காய்ந்த மிளகாய்த் தூளை
கைப்பையில் வைத்திருங்கள்!

ஒப்பனைப் பொருட்கள்
ஓராயிரம் எதற்கு?
தப்பிக்க பல பொருட்கள்
தவறாது தரும் கணக்கு!

கூந்தலில் சூடிக் கொள்ள
கூரிய பின் பயன்படுத்துங்கள்!
நகங்களை வெட்டாமல்
நீட்டி வளர்த்திடுங்கள்!

ஒட்டியாண பெல்ட்டில்
ஒளித்து வையுங்கள் கத்தியை
கட்டியணைக்கும் காமுகனை
வெட்டி வீழ்த்த வாகாகும்!

மாத்தி யோசித்தால்
மருள வேண்டியதில்லை
சேத்தில் கால் பட்டாலும்
சிறப்பாய் கழுவிடலாம்!

கௌரவம் கெடாமல்
கௌரவர்களையும் ஒரு
கை பார்த்து விடலாம்
கற்பிற்கு முள்வேலி கட்டிடலாம்!

நடுநிசியில் நகையணிந்து
நல்லவிதமாய் பயணிக்கலாம்!
நல்ல ஆண் நண்பர்களுடன்
நம்பிக்கையாய் பழகிடலாம்!

படைப்புகள் மூலம்
புது வழி பிறப்பித்து
புத்தி சொல்லித் தருகிறார்
புது கீதையில்-கண்ணன்!