வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 653

வலி அறிந்த நாட்கள்

மண்ணிலே மனிதம் மரணித்த நாட்கள்
மடிப்பிச்சை கேட்டது உயிர்காக்கவே மானுடம்
கண்ணிற்கு எட்டிய  தூரமெங்கும் பிணமலை
கொடுமை தலையெடுத்து உயிர்களைப் பறித்தது
எண்ணில்லா தேகங்கள் மண்ணில் சரிந்தன
ஏனென்று கேட்பாரற்ற இனமாக கைவிடப்பட்டது
அன்று வேடிக்கை பார்துநின்ற கூட்டமது
அரசியல் இலாபத்திற்காக இன்று கூத்தாடுகின்றது

அண்ணன் தம்பியென அவர்களை நினைத்திருந்தோம்
ஆனால் அன்னியராக்கி தாமரையிலை நீராகினார்
மண்ணை மீட்கவென பயிற்சிகள் தந்தவர்கள்
மேடையைப்போல் வாழ்க்கையில் நடித்துக் கொண்டனரே
கண்டதெல்லாம் கனவல்ல கண்முன்னே நிகழ்ந்தவை
கங்கை நதி போல இரத்தாறு
இன்னும் ஈழவர் நம்பித்தான் கெடுவாரோ
இதுதான் படிப்பினை என தெளிவாரோ

பட்ட அனுபவம் ஈழவர் எம்மோடு
பயணத்தை மாற்றி அமைப்போம் இன்றோடு
திட்டமிட்டே நடாத்தப்பட்ட படுகொலைகள் மறப்போமா
திறப்போமே புதிய கதவுகளை இனியேனும்
கட்டிக்கொண்ட கொள்கை கோபுரமாக எழட்டும்
கடைசியிலே கண்டவைகள் பாடமாக அமையட்டும்
எட்டுத்திசையின் ஈழவரும் சொந்தமாய் ஒன்றினைவோம்
ஏமாறாது எவரிடமும் நாமாக துணிவோம்

ஜெயம்
17-05-2023