வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 652

வெறுமை போக்கும் பசுமை

பச்சைநிற ஆடையை மண்மாதா பூண்டாள்
பயிர்களெல்லாம் உயிர்கொண்டு உருத்தரித்து மகிழ்ந்தன
இச்செயலைக் கண்டே மனமும் மயங்கிடும்
இதுவரைக்கும் இல்லாத புத்துணர்வு பிறந்திடும்
உச்சபட்ச ஆனந்தத்தை உயிர்களெல்லாம் அடைந்திடும்
உணவுப்பஞ்சமதை வேர்விட்ட தாவரங்கள் விரட்டிடும்
அச்சம் விரட்டும் வாழ்வு உதித்திடும்
அங்கும் இங்கும் பசுமை பங்காற்றிடும்

வித்தெல்லாம் முளைவிட்டு செடியாகி மரமானது
வாடிவாடி மாண்டதுவும் மீண்டெழுந்து செழிப்பானது
சித்திரையை தாண்டிவிட்டால் சித்திரத்தின் அழகேயது
சித்தத்தின் உள்நுழைந்து உவகையதும் உட்காந்திடும்
முத்திரையை பதித்துவிடும் இயற்கையதன் நிகழ்வு
மறுமலர்ச்சி நுழைந்துவிட வெறுமையது விலகும்

வீட்டிலுள்ள தோட்டம் பொழுதினைப் போக்கும்
வீசுகின்ற தென்றலும் வாசத்தைச் சேர்க்கும்
ஊட்டிவிடும் தாய்ப்பறவை குஞ்சுக்கு அன்னம்
உதிர்த்துவிடும் பாசங்கண்டு உள்ளமதும் உருகும்
வாட்டிவைத்த வருத்தங்களும் விடுமுறையைக் காணும்
விளைந்துகொண்டு படி அளக்கும் செடிகொடியும்
வீட்டிலுள்ள நிலைமையினை மாற்றிவிடும் பசுமை
வண்ணங்களாக எண்ணங்கள் தனிமை அகன்றுவிடும்

ஜெயம்
10-05-2023