வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 651

புவியின் நாயகர்கள்

உழைப்பு உயிராகி உடலுடன் கலக்கும்
ஊக்கம் உணர்விற்கு தீனியா யாகும்
களைப்பு களைத்தே ஓய்வைக் கேட்கும்
கடமையோ தினத்திற்குள் உருகியே பெருகும்
மழையும் வெய்யிலும் பனியும் உறவாகும்
முயற்சி அனுதினம் பயிற்சி எடுக்கும்
பிழைப்பு கருத்தோடு அழகாக நிகழும்
பூமியின் புதல்வரால் வாழ்க்கையும் மகிழும்

அஞ்சாமல் கால்பதித்து வாகையினைச் சூடிடுவார்
அந்தரத்தில் இருந்தாலும் காரியத்தை முடித்திடுவார்
நெஞ்சுரம் கொண்ட வாழ்க்கைப் போராளிகள்
நிற்காமல் எண்டிசையும் ஓடியே தேடிடுவார்
பஞ்சம் பஞ்சுபோல பறந்துவிடும் தேசம்விட்டு
பூமிமேலே சாமிகளாய் அருள் கொடுப்பார்
வஞ்சகமற்ற உள்ளதும் புறம்பதுமான பிறவிகள்
வத்தாத நதியிவரால் பூமியும்தான் செழித்துவிடும்

வியர்வையை உரமாக்க மண்ணுலகும் விளைந்தது
விந்தைகளின் களமாக நிலமும் மாறியது
உயர்த்தியே தோள்களை தாங்கினார் உலகையே
உருவாக்கும் பணியிலே பணிவினைக் காட்டியே
அயர்வும் தழுவாத துடிப்பான பூமியர்கள்
ஆக்கத்தை மூச்சாக்கி உறங்காத சீவியர்கள்
ஜெயம் கொண்ட தோழர்க்கு வாழ்த்துகள்
ஜெகத்தில் மாந்தர்வாழ்வை சிறக்கச் செய்திடுவீர்

ஜெயம்
04-05-2023