வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 617

பசி

ஒருசான் வயிற்றுக்காய் எத்தனை போராட்டம்
ஒருபிடி சோறு ஒருசொட்டுத் தண்ணீரால் வாழ்வோட்டம்
பசியால் பட்டினியால் இறந்தவர் இங்கே கோடி
பசிதீர்ப்பார் யாரோ வருவாரோ வாழும் பிணங்களைத் தேடி

பசித்திருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை
வசிப்பவன் அடுக்குமாடியில் அறியவில்லை வறுமை
புசிப்பவர் செவிகளிற்கும் கேட்கவில்லை பசித்தவர் மரணக்குரல்
அதிசயமான உலகம் செவிடானது இல்லை உதவும் நிகழ்ச்சிநிரல்

ஒருவருக்கு உணவில்லையெனில் உலகையே அழிப்பதா
இருப்பவர் தாமுணர்ந்து பகிர்ந்து அளிப்பதா
ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றானாம்
ஆலயம் ஓலைக் குடிசையாய் இருப்பதும் ஏனாம்

ஒட்டிய வயிறுடனங்கு மண்ணையுண்ணும் மெலிந்த தேகம்
எட்டியும் பார்த்திடாதிங்கு கண்ணைமூடியே தின்னும் தேசம்
தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்பவன் மனிதன்
பேணினால் அன்பை மனிதா நீயே மனிதருள் புனிதன் .

ஜெயம்
09-08-2022