சசிச
இதயம்
எதையும் தாங்கும் இதயம் எனக்கு
சிதையும் என்று போடாதே தப்புக்கணக்கு
பின்னால் இருந்து துரோகஞ்செய்யும் கோழையே
முன்னால் வந்தால் ஒட்டநறுக்குவேன் வாலையே
நண்பனென நினைத்து பழகியதெல்லாம் பாவம்
உண்மையில்லா சொந்தமென கிடைத்திட்ட சாபம்
புண்பட மனதினை வைப்பதிலென்ன இலாபம்
அன்பை எதிர்பார்த்து அடைந்துகொண்டேன் சோகம்
முதுகில் குத்தாதே முகத்தில் அறைந்துவிடு
பதுங்கியிருந்து பழி தீர்ப்பதை மறந்துவிடு
நிசமென நினைத்தேன் போலியான உன்னை
விசங்கொண்ட பாம்பாகி தீண்டுவதேன் என்னை
கரும்பாக இனித்தது ஏன்தான் கசந்ததோ
விரும்பியுண்ட தேனதும் எதற்காக புளித்ததோ
மனம்விட்டு பேசாது ஓடியோடி மறைவதுமேன்
உனக்காக உயிர்கொடுப்பேன் என்பதை மறந்ததுமேன்
ஆத்திரத்தில் நானும் வார்த்தைகளை விட்டுவிட்டேன்
ஈற்றினிலே அதை நினைத்து பெருங்கவலைப்பட்டேன்
பிரிவென்பது நட்புக்கு முதல் எதிரி
புரிந்திடின் உருகி வெளிச்சந்தரும் மெழுகுதிரி
கஷ்டப்பட்டும் மனதாலே இல்லையென சொல்கின்றேன்
இஷ்டப்பட்ட உறவிழந்து பாதைமாறி செல்கின்றேன்
தற்காலிக தோழமையென நானிதை நினைக்கவில்லை
குற்றமிருப்பின் மன்னித்து வந்துவிடு நட்பினெல்லை
ஜெயம்
11-12-2024