வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

ஜெயம் தங்கராஜா

கவி 740

நல்ல மனிதன் யார்

இல்லாதவருக்கும் உள்ளதை பகிரும் உள்ளத்தோன்
தள்ளாது எவரையும் அரவணைக்கும் குணமுடையோன்
சொல்லாது செயலாற்றி செய்வதிலே நிறைவடைவோன்
பொல்லாதவரும் இரங்கிவிடும் தனியான சிறப்புடையோன்

சுற்றத்தை குறை காணாமல் சேர்ப்பான்
கற்றபடி அறியாமை பேணாமல் ஒழுகுவான்
தற்பெருமைகொள்ளாது உறவாக்கி எளிமையாக பழகுவான்
பெற்றவரை தெய்வமாக்கி வணங்கியே மகிழ்வான்

தீதுமிகு மாந்தரிடம் விலகியே இருப்பான்
சூதுவாதை புரியாது உண்மையை உரைப்பான்
சாதுவாக இருந்துமே சாதித்து வருவான்
போதுமானவரை பிறருக்காய் தன்னையே இழப்பான்

பணமே வாழ்க்கையென பேயாய் அலையான்
தனக்கென தரணியில் எதுவும் சேர்க்கான்
மனந்தனில் பாவத்தின் சாத்தானை உட்காரவைக்கான்
கனவிலுங்கூட அடுத்தவருக்கு தீமைகள் நினையான்

யார் இங்கு நல்ல மனிதர்
பார் இவரே பாரின் புனிதர்
சேர் இவருடன் ஒன்றாய் சேர்
ஊர் உலகம் வணங்கும் பார்

ஜெயம்
12-09-2024