சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

பருவம்

சந்தோசத்தை கவலைகளின்றி கொண்டாடிய பருவம்
கொஞ்சுகின்ற அழகோடு உலாவுகின்ற உருவம்
சிந்திவிடும் சிரிப்பிலங்கே உயிருங்கூட உருகும்
சித்திரமோ நித்திலமோ நிம்மதியும் பெருகும்

பூவெனவே தேகமென சின்னஞ்சிறு உலகம்
தூக்கிக்கொண்டு அணைத்துவிட கவலைகளும் விலகும்
அழகென்றால் அழகன்றோ குழந்தைகளின் வடிவம்
நிலவுங்கூட கீழிறங்கி விளையாடவே துடிக்கும்

குழந்தைப் பருவமது வாழ்க்கையதன் அன்பளிப்பு
மலர்ந்து வாடுமுன்பே வனப்பான துளிர்ப்பு
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் கள்ளமில்லாச் சிரிப்பு
இல்லாமை அகற்றிவிடும் மண்ணுலகின் சிறப்பு

மென்மைப் பருவமது பூவினது தன்மை
உண்மை உருவமது உள்ளமோ வெண்மை
குழந்தையாக இருக்குமட்டும் இல்லையொரு துன்பம்
வளர்ந்தபின்பு தேடுகின்றேன் எங்கேயந்த இன்பம்

ஜெயம்
17-08-2024