சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

விடுமுறை

வந்ததே எதிர்பார்த்திருந்த குதூகல விடுமுறை
தந்ததே இன்பம் மகிழ்ச்சிக்கில்லை வரையறை
வருடத்தில் கிடைக்குமந்த நான்கு வாரங்கள்
உருவாக்கும் சுகங்களை நெஞ்சின் ஓரங்கள்

ஓடியோடியே செய்யும் ஓய்வில்லாத வேலை
கூடிப்பேசிட கண்டுபிடிக்கவில்லை வெறுமையான நாளை
அழுத்தங்களோ நாளுக்குநாள் கூடிக்கொண்டிருக்கும் வேளை
பளுவகற்றி பாதம்பதிக்க உருவானது சாலை

அதே இடம் அதே ஆட்கள்
இதே வாழ்வாகி கடந்திட்ட நாட்கள்
களைப்பாய் இருந்தாலும் சலிக்காது ஆட்டம்
விளைவுகள் எதிர்மறைதான் இருந்தாலும் ஓட்டம்

விடுகின்ற மூச்சை சரியாய்விடும் தினமிதுவே
எடுத்துவந்து நிம்மதியை கொடுத்துவிடும் மனமதுவே
இருந்தவிடம் விட்டு மாற்றிடத்திற்குப் பறந்து
திரும்புமட்டும் மகிழ்வன்றோ அனைத்தையும் மறந்து

சுற்றுமுற்றும் புதிய உலகே விடுமுறையில்
சற்று விலகும் கவலை வரும்வரையில்
உண்மையில் சொல்லப்போனால் தேவையான ஒன்று
நன்மையே உடலிற்கும் உளத்திற்கும் உண்டு

ஜெயம்
26-07-2024