சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

நடிப்பு

இல்லாத குணத்தை இருப்பதாய் காட்டி
கல்லான மனத்துடன் பிழைப்பினை ஓட்டி
உள்ளொன்றும் வெளியொன்றுமாக வாழ்க்கையின் காட்சி
பொல்லாத மனிதரிவர் இருக்காது மனச்சாட்சி

நடிக்கத் தெரிந்தவனுக்கு அழகான மேடையிது
நடிக்கத் தெரியாதவனுக்கோ ஆபத்தான மேடையிது
நடிப்போ சிவாஜியும் தோற்றுப்போகும் நடிப்பு
துடிப்போ இதயத்தை மிஞ்சிவிடும் துடிப்பு

முகமூடி போட்டிருப்பார் அணிந்திருப்பதோ தெரியாது
அகத்தினுள்ளே வஞ்சம் பிறரதை அறியாது
அன்பான உறவெனவே அரவனைத்தே புன்னகைப்பார்
அண்மையிலே போகவிட்டே பின் நகைப்பார்

நிறங்களை மாற்றுவதில் பச்சோந்திகளையும் மிஞ்சிடுவார்
கறக்கவேண்டியதை கறக்க நட்பாகி கொஞ்சிடுவார்
பொய்யான வேஷம் மெய்யான நடிப்பு
மெய்யில்லா வாழ்க்கைதனை வாழ்வதிலே பிடிப்பு

இன்னொருவருக்கு ஏற்றால்போல் நம்மைநாம் மாற்றுவதா
பன்றிகளின் கூட்டத்துடன் மலந்தின்ன சேருவதா
பிடித்த மாதிரி நடிப்பது பாவம்
படித்தவரும் வேஷமிட்டே அடைந்தனரே இலாபம்

துணிவான் கோவப்படுவான் சாமியின் பிள்ளை
அனியாயத்திற்கு கும்பிடுவான் சாத்தானின் பிள்ளை
இருந்தும் நடிப்பவரிடையில் சில நல்லவர்களுமுண்டு
ஒருசிலரெனினும் உறவாடலாம் அவர்களுடன் எவரெனக்கண்டு

ஜெயம்
21-06-2024