சசிச
நேரம்
நேரம் சரியில்லையென வேலையை தள்ளிப்போடாதே
தூரம் போனதெல்லாம் திரும்பியுந்தான் வாராதே
நிற்காமல் ஓடும் கடிகாரத்தை பாராயோ
உற்சாகத்தோடு வருந்தடை உடைத்து மீறாயோ
காலமதை வீணாக்கி ஆயுளும் கழிவதா
கோலமதன் செயலிழப்பில் மெய்யறிந்து முழிப்பதா
இருபத்துநான்கு மணிநேரமும் இயற்கையின் வரம்
வரும்நொடிகள் ஒவ்வொன்றையும் பற்றட்டுமே கரம்
சூரியன் நேரம்பார்த்தா வானில் உதிக்கிறது
பாரின் செயலினிலே ஒய்வின்மை தெரிகிறது
பஞ்சபூதங்களும் விடுமுறை எடுக்காதே செயல்புரிகின்றன
பஞ்சிப்படாது இயங்கியே பயன்களை குவிக்கின்றன
இனியாவது பழிபோடாது ஆற்றுவோம் கடமை
கனிந்துவிடும் நேரம் அகற்றிவிடு மடமை
நேரம்பாரா செயல்பாடே வாழ்க்கையின் சிறப்பு
நேரமில்லையென புலம்புவோரும்
அறியவேண்டுமிதன் மதிப்பு
ஜெயம்
23-04-2024