சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

பகலவன்

பயிரினை ஆக்கி உயிரினைக் காக்கும் மூலம்
ஒழியுமே இருளும் வெளிச்சத்தின் அருளும் சூழும்
மரங்கள் எங்கெங்கோ வரங்கள் அங்கங்கு கொடுப்பு
சூரியன் எழுச்சி பாரின் வளர்ச்சிக்கு எடுப்பு

தூக்கத்தால் எழுப்பி ஊக்கத்தை நுழைக்கும் செங்கதிரே
தற்காலிக ஒளியால் உற்சாகத்தை பொழிந்திடும் புதிரே
தோன்றுவது மறைவது ஆண்டாண்டாய்ப் பறைவதும் பொய்யே
சுழல்கிற தரையாலே விழுகின்ற திரையது மெய்யே

அடிவானில் வழியும் குடிகொள்ளும் எழிலின் காட்சி
முந்தியும் அழகு அந்தியும் அழகின் ஆட்சி
அண்ட வெளியில் உண்டு ஒளியை நிலவும்
கையகம் கொண்டதை வையகம் கொட்டியே உலவும்

நெருப்பான நட்ச்சத்திரம் அரும்பெரும் நட்ச்சத்திரம் என்பதும்
பேதமற்றது தருவதற்கு சேதமின்றியே உருளுது ஒன்பதும்
வெளிச்சத்தை உலகிற்கும் வெளி சத்தை உடலுக்கும்
தந்திடவே கிழக்கில் உதிக்கின்ற விளக்கே பகலவன்

ஜெயம்
04-03-2024