சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

பங்கு நீ

கொண்டாளே என்னுடன் வாழ்க்கையில் பங்கு
கண்டேனே வசந்தத்தின் வருகையை நானங்கு
ஓருயுரில் ஈருடல்கள் வாழுகின்ற அதிசயம்
யாரிவளோ அறிந்துகொண்டேன் இன்பத்தின் இரகசியம்

திருமணம் என்றாலே ஒருவருக்கொருவரின் அர்ப்பணிப்பு ஒருமனம் ஒருமனத்தின்மேல் அக்கறையின் திணிப்பு
பகிர்ந்துகொள்ள அருகினில் துணையான உறவு
அகிலமே தாராத சந்தோசமாய் வரவு

பங்கெடுத்தாள் இன்பதுன்பங்களில் உற்ற தோழியாக
எங்கிருந்தோ வந்தாலும் எனைக்காக்கும் வேலியாக
பழகிவிட பழகிவிட பாலதுவும் புளிக்கவில்லை
அழகான காலங்களை அமைக்கின்றது வாழ்வினெல்லை

சரியான பென்னைத்தான் சொர்க்கமும் நிச்சயித்தது
சரிபாதி காலத்துள் ஆனந்தத்தை உற்பவித்தது
வெறுமையை இல்லாதாக்கி இல்லத்தரசியாய் வந்தவளை
வெறுப்பேனோ ஆயுளுக்கும் பொன்னவளை என்னவளை

ஜெயம்
19-02-2024