வியாழன் கவிதை

ஜெயம் தங்கராஜா

கவி 655

இஷ்டப்பட்ட வாழ்க்கை அழகானதே

வாழ்வை மகிழ்வாக வாழ்ந்திட பழகிடின்
வருகின்ற நாட்கள் எல்லாமே திருநாளே
தாழ்வென்ற நிலை தரணியில் நிலையில்லை
துன்பத்தையும் காதலிக்க புன்னகை உறவாகும்
ஏழ்மை என்பது ஏற்றத்திற்கு பூட்டல்ல
ஏற்றால் வாழ்வை இன்பம் கருக்கட்டும்
வீழ்ந்து மடிந்தாயோ வாழ்ந்து முடித்தாயோ
வாடும் பயிர்வாழ நீர் சேரும்

மாளிகையில் வாழ்பவர்கள் ஆனந்தமாய் வாழ்வதாக
மனதிற்குள்ளே தப்பித்தவறி கூட நினைத்திடலாகாது
கேளிக்கையில் கரைபுரண்டோடுவது போலவே தெரியும்
கதவைத் திறந்தால் வண்டவாளம் புரியும்
கூலிவேலை செய்திடினும் நிம்மதி களைகட்டும்
கனிவான குணங்கொண்ட உறவுகளும் அருகிருக்கும்
போலியில்லா வாழ்வொன்று தினமும் வாழப்படும்
பட்டினி கிடந்தாலும் பாசம் பகிரப்படும்

பிச்சை எடுக்குமளவிற்கு ஆண்டவன் வைக்கவில்லை
படியளந்திட படைத்தவன் ஒருபோதும் மறந்ததில்லை
நிச்சயமற்றதே இந்த பூலோக பிறப்பு
நிறைவாழ்வோ குறைவாழ்வோ வாழ்வதே சிறப்பு
கச்சிதமாய் வாழ்ந்து கஷ்டங்களை களையலாம்
கவலைகள் நெருங்காது வாழ்வை பாதுகாக்கலாம்
உச்சம் அடைவதற்குஉருப்படியான வழிகளுண்டு
உன்கால்கள் முடிவு செய்யட்டும் ஓடுவதற்கு

மற்றவர் வழியில் உட்புகாத வரையில்
மனிதர்க்கு பிரச்சினை பின் தொடராது
அற்புதமான ஒருமுறை பூமியின் இருக்கையது
அதற்குள்ளாக எதற்காக இல்லாதோரென்றும் இருப்பவரென்றும்
சொற்ப காலம் அற்பமான வாழ்க்கை
சில தருணங்களில் பலவீனமும் வீழ்த்திவிடும்
வற்றாத வளங்களை தாங்கிய மண்ணுலகு
வரவாக்கி அவைகளை வாழ்வதுதான் அழகு

ஜெயம்
01-06-2023