அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-45
24-09-2024
விடியுமா தேசம்
விடியுமா தேசம்? முடியுமா மோசம்?
விடை கொடுப்பது யாரோ??
வினாவி வினாவி மனமிங்கு கலங்கி
விடை புரியா வாழ்க்கை!
மொழியென்று இனமென்று
முடிவொன்று வேண்டாமா?
அழிவொன்றே எமக்கென்று
அன்னியன் போட்ட சாபமோ?
தேசமெங்கும் அமைதியாய் கிடக்குது
தேகம் கொதிக்குது மீட்டுப் பார்க்கையில்
கண்ணை மூட காட்சி துலங்குது
கதறிக் கேட்குது கடைத்தெருவெல்லாம்
யாழ் நூலகம் புகையாய்த் தெரியுது
யாம் காத்த நூலோ சாம்பலாய் இருக்குது
நந்திக்கடலோ சிவந்து கிடக்குது
நம்மவரின் உடலோ கூடாய் உலாவுது
நகரமெங்கும் வெடிகுண்டு காயங்கள்
நாய்கள் குலைக்க மனமிங்கு பயங்கள்
சிவனேயென கோணேஸ்வரம் செல்ல
சீரான ஆட்சி அங்கேயும் இல்ல
மாதா என்று மன்றாட வந்தா
மடுவின் ஆட்சி மாறிக் கிடக்கு
கனவு தேசம் மலரட்டுமிங்கே
காலம் நீளுமுன் விடியட்டுமிங்கே!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.