[ வாரம் 287 ]
“உயிர்க்கொடை”
கொடைகளில் உயர்ந்தகொடை உயிர்க்கொடை
எவருமெழிதில் சாதிக்கமுடியா அருங்கொடை
பொருள் தானஞ்செய்யவே தயங்குமிவ்வுலகிடை
தன்னுயிரை ஈவதற்கு முனையுமா இவ்விடை ?
பெருவாழ்வை அறியாக்கோழைகள் தற்கொலை புரிவதுண்டு
சிறுதவறுகளிற்கஞ்சி அருவாழ்வை முடிப்பவருமுண்டு
வரலாறு போற்றும் மாவீரர்களாக மரணித்தவருமுண்டு
எம்இனம்வாழ தேசம்வாழ தம்முயிரை ஈகஞ்செய்தவர்களுண்டு
தியாகவேள்வியில் தம்முயிரை ஆகுதியாகியவர்கள்
வெட்டவெட்டத் தளைப்பவர்கள் தமிழ் இளைஞர்கள்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என வீரசபதமிட்டவர்கள்
மடியும் போதும் தமிழீழக்கனவுடன் மண்ணில் புதைந்தவர்கள்
ஆயிரமாயிரம் மாவீரர்கள் விண்ணில் உலாவருபவர்கள்
கார்த்திகை இருபத்தேழு உலகமே கொண்டாடும் ஞாபகங்கள்
காட்டாற்று வெள்ளத்தை சிறுஅணை தடுக்கமுடியுமா?
சுதந்திரக்காற்றை சுகமாயிருந்து சுவாசிக்கமுடியுமா?
காயங்கள் மறந்து உயிரைத்துறந்து மண்ணில்விதையாய்
மாவீரர் மீண்டும் மரமாய் ஒருநாள் வளர்ந்துவருவர்
அன்றேல் மண்ணிற்கு நல்ல உரமாய் வளந்தருவர்
விடுதலைத்தீ இலக்கை அடையும்வரை அணைவதில்லை
தமிழீழம் மலரும்வரைஅதன் காங்கை தணிவதில்லை
என்றுமே இறைவன் உயிர்பலிகேட்டதில்லை
அடக்குமுறை அநியாயத்திற்கெதிராய் உயிர்விட்டவர் பலர்
அன்றையஆரம்பமே இன்றைய தற்கொலைப்படையணி!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.