வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1584!

ஓய்ந்து போகும் மனம்!!

ஓயாத அலைகள் போல என்றும்
எண்ணத்தின் சிதறல் இங்கே
ஓய்வொழிச்சல் இல்லாத் தன்மை
ஒரு நாள் ஓய்ந்து போகுமே!!

வாயாடி என்றே வரலாறு கண்டு
வரன்முறை தாண்டிப் பேசிய நாவு
வஞ்சம் இன்றிப் பஞ்சம் கொண்டு
கஞ்சத் தனம் காட்டுமே அமைதியாய்

துருதுரு வென்றே பார்த்த விழிகள்
தூண்டில் போட்டு இழுத்த நொடிகள்
தூர்வாராக் கிணறு போல் இருளும்
துன்பத்தை வாழ்வில் உணரும்!!

வீதிகள் எங்கும் தடங்கள் பதித்து
வீறு நடை போட்ட கால்கள்
சோர்வு கண்டு சோம்பிக் கிடக்கும்
சந்தடி யின்றித் தவித்து நிற்கும்!!
சிவதர்சனி இராகவன்
24/2/2022