வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1866!

நல்லை நகரில் விழாக்கோலம்..!

ஆண்டுக்கு ஒருமுறையாய்
அழகாய் விழாக்கோலம்
நல்லைக் கந்தன் எழுந்தருளும்
இரதத்தின் உலாக்காலம்
ஆழியென அலைகடலென
ஆர்ப்பரிக்கும் பக்தர் கூட்டம்
அருள் மழையில் நனைந்தேகும்..!

சீர்பூத்த ஈழத்தில்
பேர் பொறித்த ஆலயம்
அன்று தலை நகராய் மிளிர்ந்த
வரலாற்றின் சான்றாதாரம்
தாய்மொழி அரசோச்சிய
அரியணை நல்லூராய் நின்று
ஆல்போல் வேரூன்றிய
பண்பாட்டின் மூலாதாரம்…!

ஏழை பணக்காரர் பேதமை
எள்ளளவும் இன்றியதோர்
ஏற்றத் தாழ்வற்ற பண்பும்
வீற்றிருக்கும் கந்தன் வீதியில்
எங்கள் ஈகையாளன் பார்த் தீபன்
நினைவெழும் புனித நாள்
வீழ்ந்திடும் பகைமையில்
வீழாதெழும் பண்பாடும் ஈகையும்..!
சிவதர்சனி இராகவன்
13/9/2023