வியாழன் கவிதை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1847

காணாமல் ஆக்கப்பட்டோர்!
இருப்பினை உறுதிசெய்யா
இழப்பினையும் முன் மொழிவு
சொல்லா
துயர நிலை தங்கி நின்று
உறவுகளை வருத்தும் நிலை
சாபமோ சரிதமோ
தொடர்கதையாம் ஈழத்தில்
இதுபோல உலகெங்கும்
உருக்குலைக்கும் கதைகள்
உணர்ந்திடவே ஒரு நாளாம்…

போரென்றும் வன்முறை
வரலாற்றுச் சதியினிலே
சகதிகளுள் புதை குழிகள்
விழுங்கியவை எத்தனையோ
மீட்பரை நம்பியே நின்ற
மனங்கள் மீட்டபோது
எஞ்சியதோ உடலெச்சங்கள்!

இளையோர் முதியோர்
பெண்ணென்று ஆணென்று
யுத்த தர்மம் காத்திடாது
யுகங்களாய்த் தொடர் துயரச்
சிக்கலுக்குள் இன்னுமே
காத்திருக்கும் உறவுகளின்
நம்பிக்கை காக்கப்படுமோ?..
சிவதர்சனி இராகவன்
9/8/2023