சந்தம் சிந்தும் கவிதை

சரளா விமலராசா

வணக்கம் உறவுகளே

வெற்றிப்பயணம்

எண்ணம் என்றும் தெளிவாக
ஏறு படியாய் எழுகின்றார்!
தண்ணீர் போன்றே குளிர்மனத்தால்
தாவிக் குதித்தே ஓடுகின்றார்!
உண்மை ஒன்றே மூச்சாக
உலகைக் கைக்குள் பிடிக்கின்றார்!
திண்மை கொண்ட நெஞ்சத்தால்
திருப்பும் மூனையைத் தீட்டுகின்றார்!

கட்டி வைத்த ஆசைகளை
கனவு கண்டு கழிக்கின்றார்!
பெட்டிப் பாம்பாய் அடங்காமல்
பேரும் புகழும் அடைகின்றார்
நட்டு வைத்த செடிபோல
நன்றாய் வளர்ந்து விளைகின்றார்!
பட்டுப் பூச்சாய் மின்னிடவே
பறக்கும் இறகை விரிக்கின்றார்!

கல்லும் முள்ளும் பட்டாலும்
கவலை மறந்தே துணிந்திடுவார்!
சொல்லால் அம்பை விட்டாலும்
சுடரும் விழக்காய் ஒளிர்கின்றார்!
அல்லும் பகலும் அயராது
அனைத்துச் சிறப்பும் பெறுகின்றார்!
வல்ல வாழ்வின் வெற்றிகளை
வளமாய்ச் சூடி மகிழ்கின்றார்!

சரளா விமலராசா சுவிற்சர்லாந்து