சந்தம் சிந்தும் கவிதை

சரளா விமலராசா

கலிவிருத்தம்

காய்+காய்+காய்+காய்

வலி

பதவிமோகப் போதையினால் பரிதவிக்கும் தாய்நாடே!
கதியிலாத ஏதிலரை கடுகளவும் கண்டுகொளார்!
விதியாடும் விளையாட்டில் விரைந்தோடும் பேராசை
மதிமயங்கி அலைகின்றார் மனமிரங்கா மாந்தரினம்!

குழிபறிக்கும் தீயோரும் குவலயத்தில் குதித்தாட
பழிபாவம் சூழ்ந்திருக்கும் பலவினைகள் சேர்ந்துவர
அழிவினையே தேடிநிற்பார் அறிவுள்ள வஞ்சகரும்!
கழிவான மந்தையென கணித்திருக்கும் இவ்வையமே!

துயிலெழுந்து துதிபாடி தூரத்து உறவினையும்
உயிரூட்ட உணவளித்து உபசரித்த பெரியோரும்
வெயிலாடி வேட்டையாடி நம்முன்னோர் வாழ்ந்திருந்தார்!
கயிறிழந்த பட்டமின்று கண்கலங்க வலிக்கிதுங்கே

சரளா விமலராசா சுவிற்சர்லாந்து