சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.
தலைப்பு : *இயற்கை*
காலப் பருவத்தின் கண்மயக்கும் கலையழகில்
ஞாலக் கோலங்கள் நாற்றிசையும் எழிலாக
கோல மயிலாட குவலயத்தின் குயில் பாட
நீலக் கடலாட நீந்துமீன் நின்றாட
காலைப் பொழுதாக கதிரொளியும் களிப்பூட்ட
சோலை வனமெங்கும் செழித்தாங்கே தழைத்தோங்க
மாலைப் பொழுதாக மதிநிலவு மனதாள
சாலைத் தெருமரங்கள்
சாய்ந்தாடி தென்றல்தர
அருவி மலையிருந்து அடங்காமல் உருண்டோட
குருவி மரத்திருந்து கூச்சலிட்டு குதூகலிக்க
அரும்பு மொட்டுக்கள் அழகழகாய் அலர்ந்திருக்க
சுரும்பும் சுற்றிவந்தே சுவைத்தேதான் தேனுண்ண
இயற்கை என்கின்ற இன்பத்தாய் இத்தரையே
மயக்கும் கலையழகில் மனதையே ஆள்கின்றாள்
அயரா அன்னையவள் அனுதினமும் எமக்கானாள்
தயவாய்க் காப்போமே தரணியாம் தாயவளை .