வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
விருப்புத் தலைப்பு!
உதவும் கரங்கள்!
(ஒருவிகற்ப இன்னிசை அளவியல் வெண்பா)
சாதிமத பேதமற்ற சத்திரங்கள் வேண்டுமன்றோ
நாதியற்ற மாந்தர்கள் நாவறண்டு போகுதன்றோ
ஆதியிலே அவ்வை அறஞ்செயச் சொன்னாளே
ஊதியம் இல்லை உயிர்க்கு!
பலனை எதிர்பாரா பண்பில் உதவி
நலமாய் இருக்குமே நாடும் சிறக்க
பலமாய் இருந்தே பரிவில் உயர்ந்தே
விளங்குவோம் ஏற்றுவோம் விளக்கு!
இடுக்கண் களைவது ஈகையின் உச்சம்
கொடுப்பதில் ஆனந்தம் கண்டிடலாம் உலகில்
துடுப்பாய் இருந்தே துயரம் களைந்து
அடுத்தவர் அல்லல் அகற்று!
விளம்பரம் வேண்டாம் விருப்புடன் செய்வோம்
உளமார ஈதலே உத்தமம் ஆகும்
வளங்கள் நிறைய வறியவர் வாழ்வில்
அளப்பரிய சேவையும் ஆற்று!
இரப்பவர் உள்ளம் இனிதாய் மலரும்
கரங்கள் கொடுத்துக் கருணையும் காட்டித்
தரமும் உயர்த்திடத் தெய்வமாய் மாறும்
வரமாய் அமையுமே வாழ்வு!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றி!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
அனைத்துக் கவிப்படைப்பாளர்களுக்கும்
பாராட்டுக்கள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.