வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
பள்ளிக்காலம்
*****************
மறக்க முடியாத மகிழ்வான காலம்
இறக்கை ஒன்றும் இல்லை ஆனாலும்
பறந்து திரிந்த பட்டாம்பூச்சிகள் ஆனோம்
நிறங்கள் பலவிதம் நீண்டது நட்பு
குறைகள் கண்டாலும் கூடினோம் மறுகணம்
அறைகளில் அடித்த அரட்டை ஆனந்தமே
மறக்கவில்லை ரீச்சர் மாஸ்டர்மாரை அறிவுக்கண்
திறந்தவர்களை நாங்கள் திட்டித் தீர்த்தோம்
பரிகாசம் செய்தோம் பாடங்களில் கவனம்
அரிதான பொழுதுகள் அடிகள் வாங்கினோம்
துரிதமாக ஓடித் துள்ளி ஏறினோம்
வரிசையில் நிற்காமல் வாங்கினோம் பேச்சு
மாரித் தவக்கைகள் மாறிமாறிக் கத்துவதுபோல்
பேரிரைச்சல் போட்டோம் பேருந்து நடத்துனர்
சகித்துக் கொண்டார் சாலையில் கவனம்
மகிழ்வான பயணம் மாலையில் டியூஷன்
உயர்தரம் என்றதும் ஊக்கம் அதிகம்
அயற்சி தவிர்த்தோம் அதிகாலை எழுந்தோம்
பள்ளிக் காலம் பருவத்தே பயிர்செய்து
அள்ளிக் கொண்டோம் அளப்பரிய செல்வம்
நல்வித்தை தந்தது நல்லதொரு வாழ்வு
கல்வித் தகைமைகள் கடமைக்கு உதவின!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு நன்றி!
திரு.திருமதி நடாமோகன் அவர்கட்கு நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!