சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்தி தாசன்

அன்பானவர்களே !
இன்று இசை வல்லுனர் என்று தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் பெயர் பெற்று அனைவர் நெஞ்சிலும் நீங்காத இடத்தைப் பெற்று வாழும் ” மெல்லிசை மன்னர் ” என்று அன்புடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா அவர்களின் நினைவுநாள். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை,, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ” என்று தீர்க்கதரிசனம் உரைத்த என் எழுத்தின் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் உடன்பிறவாச் சகோதர உறவு கொண்டு வாழ்ந்தவர். கவியரசரும், மெல்லிசை மன்னரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல வாழ்ந்தவர்கள். கேரளாவில் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள எலப்புள்ளி எனும் கிராமத்தில் உதித்த இசை விடிவெள்ளி இவர். பள்ளிப்படிப்பு எதுவுமின்றி இசை மீதிருந்த நாட்டத்தால் தானார்வ உந்திதலினால் கர்நாடக இசை பயின்று 13 வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமை இவருக்குண்டு. 1953ம் ஆண்டு ஜெனோவா எனும் திரைப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசைஅயமைத்ததுடன் தொடங்கியது இவர் திரைப்படவுலக இசைப் பயணம். இசைக் கலைஞர் திரு. இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 படங்களுக்கு இசையமைத்துள்ளார். சுமார் ஏறத்தாழ 1000 திரைப்படங்களுக்கு இசையமைத்துச் சாதனை புரிந்தவர். என் வாழ்நாளில் இவரை இவர் இல்லத்தில் ஒருமுறை சந்தித்து கவியரசரைப் பற்றி உரையாடும் பாக்கியம் பெற்றவன் நான். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். இவரது நினைவுநாளில் இம்மாமேதையை நினைத்து வணங்கி அவர் ஆசிவேண்டிப் பணிகிறேன்.

நினைவுநாளின்று இன்றுமக்கு
நினைப்பதற்கு மறந்தால்தானே
நினைவுகளில் தவழ்கின்றீர்
நிர்மலமான இசைதனிலே !

இன்னிசைச் சக்கரவர்த்தியாய்
இசையுலகின் உயிர்நாடியாய்
இதயத்தில் நீங்காமலொரு
இடத்தினைப் பிடித்தவரே !

கற்றதனால் பெற்றதல்ல
கலைவாணி அருளென்பேன்
காற்றினிலே தவழ்ந்துவரும்
காதினிலே தேனாயிசைக்கும்

கவியரசர் வரிகளெல்லாம்
களித்தாடும் உம்மிசையில்
காலமெல்லாம் கூடவரும்
கடைசிவரை கருத்திலாடும்

மெல்லிசையின் மன்னரென
மேவிவரும் புகழுமக்கு
மெல்லினிய புன்னகையில்
மகிழ்ந்திடுவாள் தமிழன்னை

எம்.எஸ்.வி எனும்சொற்கள்
எம்முள்ளம் கலந்திருக்கும்
என்றும் தமிழாகிவிடும்
எம்மினிய இசைக்கடலே !

அகவைகள் ஏழின்றிங்கு
அகன்றே போனதய்யா
ஆறாமல் உமைத்தேடும்
அன்பான தமிழுள்ளங்கள்

அமரராகிப் போய்விட்டாலும்
அறுதியாய் வாழ்ந்திடுவீர்
அகிலத்தில் வாழுமெங்கள்
அன்னைத்தமிழ் சொந்தங்களோடு