சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 276 “ஞாபகங்கள் !”

அவை இனிமையா ? இல்லை
இதயத்தின் சுமைகளா ?

சில நேரங்கள் . . .
சிற்சில நேரங்கள் அவை
கற்கண்டாய் இனித்துக் கொண்டு . . .
அதே நெஞ்சில் . . அதே ஞாபகங்கள்
வேறொரு சமயத்தில்
வேப்பங்காயென கசக்கின்றனவே !

புரியாத
புதிர்களாய் காலச் சக்கரத்தின்
சுழற்சிக்குள்
சிக்கிக் கொண்டே உருண்டிடும்
சிதைந்துபோன ஞாபகங்கள் . . .

அவை மட்டும்
புரிந்திருந்தால் வாழ்வில்
எத்தனை இரவுகளில்
மூடாத விழியிமைகள்
மூடியிருக்கும் ?

காலம்
அதற்கென்ன
அது தனது போக்கிலே
ஞாபகங்களை உலக்கிக் கொண்டு
பகடைகளாக எம் உருட்டிக் கொண்டு
உருண்டு கொண்டே
செல்கின்றதே !

உருண்டு கொண்டே
நாமும் ஞாபகங்களின் மீதேறி
அடுத்தவரைக் காட்டிலும்
உயர்ந்தவர் எனும் மாயையில்
மூழ்கிக் கொண்டே
உருட்டப் படுவதை அறியாமல்
ஊமைகளாய் எங்கோ செல்கிறோம் !

ஓ !
அது என்ன . . .
சிரிப்புச் சத்தம்
பலமாகக் கேட்கிறதே !

ஒரமாய் நின்று
ஞாபகங்கள் எமைப் பார்த்து
ஓங்காரமாய் ஓலமிட்டு
சிரித்துக் கொண்டிருக்கிறது . . . .

சக்தி சக்திதாசன்