சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பயணம் போகின்றோம் அந்தப்
பாதையோர் நெடுஞ்சாலைதான்
துகள்களாய்ச் சிதறிய நெஞ்சம்
தூரத்தே தெரிவதும் நிழல்தான்

சேற்றினில் மலர்ந்திடும் செந்தாமரை
சேர்ந்திடும் ஆண்டவன் ஆலயத்தை
அழகாய் மலர்ந்திடும் தாழம்பூ
அதற்ல்லை இறைவன் திருவடி

தீபத்தின் ஒளியில் கற்கலாம்
தீபமேயொரு இல்லத்தை எரிக்கலாம்
ஏற்றிடும் தீபம் ஒன்றேதான்
ஏந்திடும் கரங்களே வேறுவேறு

விடியல்களைத் தேடி நடக்கிறோம்
விடிந்தும் மனதில் இருளிருக்கு
முடிந்த கதைகள் தொடர்வதில்லை
முடிவறிந்தும் ஏனோ புரிவதில்லை

வானத்தில் இருக்கும் அன்னை
வடியும் கண்ணீரோ தாரையாய்
ஞானத்தில் மூழ்கிய தந்தையவர்
மெளனத்தின் உண்மை சாட்சியாய்

காற்றடித்துக் கலையும் மேகமாய்
நேற்ற‌டித்த வார்த்தைச் சாரத்தினாலே
தோற்கவில்லை நேரான நெஞ்சம்
போற்றுகிறேன் அடைந்த அனுபவத்தை

வீழ்ந்து விடுவேன்று நினைத்தாயோ
வீரமாய்க் கூவிய பாரதிப்பாட்டன்
வாழ்க்கையும் அவ்வழியில் தானே
வீழமாட்டேன் தமிழ் உள்ளவரை

சேர்ந்திடும் மனத்துளிக் கணங்கள்
பூசிடும் அன்பெனும் பசையையே
மலர்ந்திடும் மனதில் மகிழ்வுணர்வு
மிதந்திடும் தமிழ்வானில் பறவையாய்

உள்ளத்தின் ஆழத்தில் ஏதேதோ
உரசிடும் உணர்வுகள் துளிர்த்திடும்
உதித்திடும் காலையின் விழிப்பினில்
ஊற்றெடுக்கும் கவிதை பொங்கியே

எழுதாத பொழுதுகள் இருப்பதில்லை
என்னுடைய வாழ்க்கைப் பாதையில்
நிறைகின்ற குடமொன்று வழிவதுபோல்
நிற்காமல் சுரக்குமென்னுள் கவிதைகள்

சக்தி சக்திதாசன்