சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 270 … உள்ளத்தில் ஊறும்
உணர்வுகளும் மாறும்
உன்னத வேளையிலே
உறுதிகளும் குலையும்

உறவுகளின் கோலம்
உருக்குலையும் காலம்
உதிருகின்ற முட்களாய்
உறுத்துமந்தக் கணங்கள்

பள்ளந்தனை நாடியே
வெள்ளமென ஓடிடும்
கள்ளமற்ற நெஞ்சின்
குள்ளமற்ற வெண்மை

கடந்துவிட்ட காலத்தில்
நடந்துவிட்ட நிகழ்வுகள்
புரிந்தவொரு வேளையில்
தெரிந்தசில உண்மைகள்

விதைத்ததந்த வினைகளவை
விளைந்துவந்த போதப்போ
வதைத்தந்த நினைவுகளுள்
புதைந்துபோன வேதனைகள்

சத்தியத்தின் சோதனைகள்
நித்தியமாய் வாழ்க்கையிலே
சுற்றியுள்ள திரைகளெம்மை
பற்றிக்கொண்ட மாயைகள்

உடலென்றும் நிலையல்ல
உள்மனமும் நிஜமல்ல
உண்மையெங்கள் ஆன்மாவே
உணர்ந்திட்டால் அமைதிதானே

சக்தி சக்திதாசன்