சந்தம் சிந்தும் சந்திப்பு -262- “நேரம்”கவிதையில் எழுவேன்
கவிதையில் வாழ்வேன்
கவிதையாய் மலர்வேன்
கவிதையுள் உறைவேன்
எனக்குள் கவிதைகள்
எப்படி விளைகின்றன ?
எனக்குள் தமிழை
எவர்தான் விதைத்தார் ?
தீராத கேள்விகளும்
கிடைக்காத விடைகளும்
இருந்திடும் மனதினுள்
இனித்திடும் கவிதைகள்
சமூகத்தின் நிகழ்வுகள்
சத்தமாய்க் கவிந்திடும்
சரித்திர நிகழ்வுகள்
வரிகளாய் முகிழ்த்திடும்
பார்வையின் கோணத்தில்
பதிவதெல்லாம் கவிதைகள்
பார்ப்பதும் கேட்பதும்
புரிந்திடும் கவிதைகளாய்
வரலாற்று நாயகர்கள்
வடிவங்கள் கவிதைகளாய்
உணர்வின் பிரவாகம்
ஊறிடும் கவிதைகளாய்
இருப்பினும் கவிஞனல்ல
இயற்றுவது கவிதையுமல்ல
தானாய் விளையுது
தமிழாய்த் தவழுது
சக்தி சக்திதாசன்