சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“பெண்மையை போற்றுவோம்”
பெண்ணென்ன ஆணென்ன தோழி
பிறப்பறிந்தா வருகின்றோம் இங்கே
உழைப்பொன்றே பெரிதென்று நம்பி
உழைத்திடுவாய் உலகெங்கும் ஓடி

சமையல் கலை ஒன்றே தோழியர்க்கு
சமயம் என்று வகுத்ததொரு காலம்
சமஉரிமை கொண்டிங்கு மங்கையர்
சாதனைகள் படைத்திடும் நேரம்

அன்பு கருணை பாசம் அனைத்தும்
அரும்பும் அன்னை மன‌தில் தானே
இரும்பு போன்ற உறுதியும்
இயற்கையாக அமையுது

பெண்கள் புத்தி பின் புத்தி என‌
மூடர் பல கூறியுமை தளையினுள்
மாட்டி வைத்து அமுக்கவே
முயன்றிடுவார் அறிந்திடுவீர்

புதியதோர் உலகமிது இங்கே
புதுமைகள் பல விளையுது பாரும்
பதுமைகளாக பவனி வந்தவர்
பாவையர் புரட்சிகள் செய்கின்றனர்

புதுமைப் பெண்களென பாரில்
புலவன் பாரதி கூறி வைத்தான்
புவியில் அதனைப் பிழையாய்ப்
புல்லர் பலரும் கூறி நகைத்தார்

ஆடை குறைத்து கவர்ச்சி காட்டும்
அறிவற்ற செயல் புதுமை அல்ல‌
சமுதாயம் எனும் வரம்புக்குள்
சரித்திரம் செய்வதே புதுமை

கழுத்தினில் தாலியை ஏற்றி
கருத்துக்கு தடைகளைப் பூட்டி
துடிப்புடன் செய்திடும் செயல்களை
தடுத்திடும் வீணரை மாற்றுவீர்

வீட்டினைக் காக்கும் திட்டங்கள்
தீட்டிடும் திறமைகள் கொண்டோர்
நாட்டினைக் காத்திடும் வகையில்
ஆற்றிடும் செயல்கள் வெல்க‌

பெண்களை மடமை செய்வோர்
தம் அன்னையை மதிக்காதோரே
உண்மையைப் புரிந்தவர் மனதில்
பெண்மையின் உயர்வு தெரியும்

துறைகள் அனைத்திலும் புகுந்து
சிறைகள் அனைத்தையும் உடைத்து
நிறைகள் பலவும் பெண்ணினம் கண்டிட‌
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

உலக மகளிர் தினத்தில் நீங்கள்
உலகில் மாற்றங்கள் செய்வீர்
உன்னத மங்கையர் பெருமைகள்
உடைக்கட்டும் பேதங்கள் தம்மை

வாழ்க்க ! வாழ்க ! மாதர்கள் வாழ்க !
வையகம் வாழ்த்தவே வாழ்க‌
வாழ்ந்திடும் வகைகள் அனைத்திலும்
வகை சூடி மகிழ்வுடன் வாழ்க‌

வாழ்த்துக்களுடன்
சக்தி சக்திதாசன்